Published : 03 Dec 2019 01:53 PM
Last Updated : 03 Dec 2019 01:53 PM
மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து கூடல்நகர் வரையிலான சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் இன்னும் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டுநகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் எதிரிலிருந்து மூன்றுமாவடி, ஐயர்பங்களா வழியாக கூடல்நகர் வானொலி நிலையம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 10.6 கிலோ மீட்டர் தூரமுள்ள இச்சாலைப் பணியின் திட்ட மதிப்பீடு ரூ.40 கோடி ஆகும். இத்திட்டம் மாட்டுத்தாவணி-சர்வேயர் காலனி, சர்வேயர் காலனி-மூன்றுமாவடி, மூன்றுமாவடி-கூடல்நகர் என 3 பகுதிகளாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றில் மேலூர் சாலையையும் அழகர்கோவில் சாலையையும் இணைக்கும் 120 அடி சாலை மட்டும் 6 வழிச்சாலை ஆகவும், மற்ற சாலைகள் 4 வழிச்சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் மட்டும் விரைவாக நடைபெற்று வருவதாகவும், மின்கம்பங்களை சாலையோரத்திற்கு மாற்றுவது, பாதாளச் சாக்கடை, மழைநீர் கால்வாய் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தாமதமாவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து “இந்து தமிழ்” உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட சர்வேயர் காலனியைச் சேர்ந்த ரகுநந்தன் கூறியதாவது, 120 அடி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இச்சாலையில் இதுவரை மின்கம்பங்கள் இன்னமும் சாலை ஓரத்திற்கு மாற்றப்படாமல் பழைய இடத்திலேயே இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த கட்டமாக இச்சாலை முழுவதும் காங்கிரீட்டால் ஆன மையத் தடுப்புகளை அமைத்து விட்டனர்.
இதனால் ஏற்கெனவே சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்கள் தற்போது ஒருபுறச் சாலையின் நடுவில் வைக்கப்பட்டது போல் அமைந்துள்ளது. மையத் தடுப்புகள் கட்டப்பட்டு இரண்டு வாரங்களாகியும் இதுவரை மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்டர் மீடியனுக்கும் மின் கம்பங்களுக்குமான இடைவெளி மிகக் குறுகலாக உள்ளதால் பேருந்துகளின் படியில் தொங்கிச் செல்லும் பயணிகள் உள்ளிட்டோர் கம்பத்தின் மீது மோதிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது.
தொடரும் அலட்சியம்
இச்சாலை திட்டத்தில் ஏற்கெனவே மூன்றுமாவடி - ஐயர்பங்களா இடையேயான சாலைப் பணிகளிலும் இதுவரை மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் இங்கும் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டும் குறுக்காக உள்ள மின்கம்பங்களால் சாலையை பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. அதேபோன்ற நிலைதான் தற்போது 120 அடி சாலையிலும் ஏற்பட்டுள்ளது. சாலைப்பணிகள் துவங்குவதற்கு முன்பே மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது மின்கம்பங்களை அகற்றிய பிறகாவது சென்டர் மீடியன்களை கட்டியிருக்க வேண்டும். அரசின் ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து செயல்படாமல் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் மதுரை கோட்டப் பொறியாளர் பிரசன்ன வெங்கடேசனிடம் கேட்டபோது, “இச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் மின்கம்பங்களை மாற்றித் தருமாறு மின்வாரியத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதியுள்ளோம்.
ஆனால் இதுவரை மாற்றவில்லை. இம்மாத(டிசம்பர்) இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் எங்களால் சென்டர் மீடியன் அமைக்கும் பணியில் மேற்கொண்டு காத்திருக்க முடியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT