Published : 02 Dec 2019 12:27 PM
Last Updated : 02 Dec 2019 12:27 PM

பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிப்பு: சுங்கச்சாவடிகளை நீடிக்கும் உள்நோக்கம்; வேல்முருகன் கண்டனம்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

பாஸ்டேக் மின்னணு முறையில் கட்டணம் வசூலிப்பது சுங்கச்சாவடிகளை நீடிக்கும் உள்நோக்கமே மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் (FASTag) மின்னணு முறையில் பணப் பரிமாற்ற அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், பாஸ்டேக் அட்டையை டிசம்பா் 1-ம் தேதி வரை இலவசமாக சுங்கச்சாவடிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இதனால் அட்டையைப் பெற சுங்கச்சாவடிகளில் உள்ள மையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனா்.

தற்போது இதற்கான கால அவகாசம் டிசம்பா் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், "டிசம்பா் 15-ம் தேதி வரையில் சுங்கச்சாவடிகளில் உள்ள விற்பனை மையங்களில் பாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும். டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை நாளொன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அனைத்திற்கும் சுங்கக் கட்டணம்வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் மற்றும் காலதாமதம் காரணமாக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள், கைகலப்புகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில்தான் பாஸ்டேக் திட்டம் வருகிறது.

அதன்படி, வாகனத்தின் முகப்புக் கண்ணாடியில் பாஸ்டேக் மின்னணு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வாகனங்கள் மட்டுமே இனி சுங்கச்சாவடிகளை கடக்க முடியும் என்றே தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் நகலை கொடுத்து இந்த பாஸ்டேக் மின்னணு ஸ்டிக்கரைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கரைப் பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சுங்கச்சாவடிகளை கடக்கும்போது இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர், ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கக் கட்டணத்தைப் பிடித்தம் செய்துகொள்ளும்.

அதுமட்டுமின்றி, வாகனங்களின் பதிவு எண்ணும் பாஸ்டேக் மின்னணு ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணும் ஒன்றாக இருந்தால் மட்டுமே சுங்கச்சாவடிகளை கடக்க முடியும். பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வாகனங்களில் தப்பிச்செல்ல முயன்றால் அவர்களை எளிதில் பிடிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பதால் தேவையற்ற சச்சரவுகளும் ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக நாம் கேட்கும் கேள்விகள் புதிதல்ல; ஏற்கெனவே தொடர்ந்து கேட்டு வருபவைதான். அதாவது, புதிய தொழில்நுட்பமான ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது இருக்கட்டும்; சாலை வரி கட்டும் நாம் ஏன் சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டும்?

ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளில் இன்னும் சுங்கக் கட்டண வசூல் தொடர்வது ஏன்?

மேலும், வணிக நோக்கிலும், தொழிற்சாலைகளுக்காகவும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. அதை விடுத்து சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் சரி?

இந்தக் கேள்விகளை நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசும் மத்திய அரசிடம் இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

ஆனால் அதிமுக அரசுக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றும் எண்ணம் இல்லை என்றே தெரிகிறது. இது பற்றி தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், "தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வரும் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மொத்தம் 20 கி.மீ. தூரத்துக்கு பெருங்குடி, துரைப்பாக்கம், ஏகாட்டூர், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் செயல்படும் சுங்கச் சவடிகளில் ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யவுள்ளோம். இதற்காக பல்வேறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மேலும், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை; கண்டபடி கட்டண வசூல் என்பதுதான் தமிழ்நாட்டில் நடைமுறையாக இருக்கிறது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால்தான் பொதுமக்கள் சுங்கச்சாவடிகளை எதிர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சாலை மேம்பாட்டுக்காக செலவிட்ட பணத்தைச் சிறுகச் சிறுகத் திரும்பப்பெறும் நோக்கில் வாஜ்பாயி ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான் சுங்கச்சாவடிகள்!

ஆனால் அந்தப் பணத்திற்கு மேலாக பலநூறு மடங்கு திரும்பப்பெற்றும் சுங்கச்சாவடிகளை அகற்றாது, கட்டணத்தை மாத்திரம் உயர்த்திக்கொண்டே போவது ஏன்?

அந்தக் கட்டணத்தையும் பாஸ்டேக் மின்னணு முறையில் வசூலிப்பதைப் பார்த்தால், சுங்கச்சாவடிகளை நீடிக்கும் உள்நோக்கமே மோடி அரசுக்கு என்றாகிறது!

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, சுங்கச்சாவடித் திட்டத்தையே கைவிட வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x