Published : 02 Dec 2019 10:44 AM
Last Updated : 02 Dec 2019 10:44 AM

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு இல்லை என்பதா? - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தனது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பயணம் தொடர்பாக ‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தனது அரசின் முன்னுரிமை பட்டியலில் இல்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை என்றும் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதிபராக பதவியேற்றதும் ‘‘இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன்’’ என்று கூறிய கோத்தபய ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தை போற்றுவதாகாது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுய
மரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x