Published : 02 Dec 2019 08:34 AM
Last Updated : 02 Dec 2019 08:34 AM
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடியபலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். தொடர் மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. ஏரி, குளங்களும் நிரம்பி வழிகின்றன. டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை அதன் கொள்ளளவை எட்டி, உபரிநீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஏராளமான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை அருகே நல்லவன்னியன்குடிக்காடு, நெய்வாசல், வாண்டையார்இருப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நீரை வடிகால் மூலம் வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மீட்புப் படையினரும்தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும்.
கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடலூரில் 17, நெல்லையில் 15, காஞ்சிபுரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு மழை இருக்காது. டிசம்பர் 10 அல்லது 15-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கும்.
வங்கக்கடலில் தற்போது புயல் எதுவும் இல்லை. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழையும் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்பதால் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி வானிலை ஆய்வு மையத்தால் அரசுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT