Published : 30 Nov 2019 02:30 PM
Last Updated : 30 Nov 2019 02:30 PM

திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதாக நீதிமன்றம் சொல்லவில்லை: ஸ்டாலின்

பணிகளை மேற்பார்வையிடும் ஸ்டாலின்

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, மக்கள் பிரச்சினைகளைக் கேட்ட திமுகதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"உண்மையைத் திரும்ப திரும்ப சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி .

உள்ளாட்சி தேர்தலை நிறுவத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். 3 வருடமாக இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது.

திமுக சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஆலந்தூர் பாரதி நீதிமன்றத்திற்கு சென்று "தேர்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக் கூடாது. நடத்தியே தீர வேண்டும். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள், இடஒதுக்கீடு எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும்" என வாதிடுகிறார்.

அந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் இவற்றை முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர திமுக தேர்தலை நிறுத்தியதாக சொல்லவில்லை. நான் மக்களிடம் மட்டும் இல்லை, சட்டப்பேரவையிலும் இதனை பதிவு செய்துள்ளேன்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.

அடுத்தது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது என்னுடைய கேள்வி.

இதுகுறித்து முதல்வர் சொல்ல வேண்டாம். ஆனால், தேர்தல் நடத்தும் ஆணையத்திடமே திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்று வார்டு வரையறையை முறைப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களிடமிருந்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது மாநில தேர்தல் ஆணையம். அந்த கூட்டத்தில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேரிடையாக சென்று மீண்டும் நினைவுப்படுத்தி உள்ளனர். இதுவரைக்கும் பதில் இல்லை. ஆகவே இதெல்லாம் முதல்வர் சொல்கிறாரா? ஆட்சி சொல்கிறதா? அரசு சொல்கிறதா என்ற கவலை இல்லை. தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்தவேண்டும்" என்றார்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையோடு இருக்கிறது என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு ‘‘இல்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலைநாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

12,500-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டியவர்கள் நாங்கள். இந்த அரசு கூட்டவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் திமுக தான் கூட்டி, அங்குள்ள பிரச்சினைகளை நாங்கள்தான் கேட்டுள்ளோம். மனுக்களும் நாங்கள்தான் பெற்றுள்ளோம். ஆகவே தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

ஒருவேளை சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

--

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x