Published : 30 Nov 2019 02:15 PM
Last Updated : 30 Nov 2019 02:15 PM

மதுரையில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த 8 அடி நீளம் 9 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இளைஞர்கள்

மதுரை

மதுரை நாகமலை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 8 அடி நீளமும், 9.195 கிலோ எடையுடன் கூடிய மலைப்பாம்பை ஊர்வனம் அமைப்பினர் பிடித்து வனத்துறையினர் உதவியுடன் காட்டில் விட்டனர்.

மதுரை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அதனால், பாம்புகள் வயல்வெளிகள், முட்புதர்கள், காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளில் புகுந்து வருகிறது.

இந்த இயல்பைப் புரியாத பொதுமக்கள் பலர் அறியாமையால் பாம்புகளை அடித்துக் கொன்றுவிடுகின்றனர். வெகு சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அதை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விடும் நிகழ்வுகளும் நடக்கிறது.

இந்நிலையில் மதுரை நாகமலை அருகே குடியிருப்புப் பகுதியில் நேற்று 8 அடி நீளமும், 9.195 கிலோ எடையுடன் கூடிய மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பைக் கண்டதும், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அந்த பாம்பு பார்ப்பதற்கு பெரிதாக இருந்ததால் பீதியடைந்த மக்கள், அப்பகுதி ஊர்வனம் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். ஊர்வனம் அமைப்பினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் சென்றனர்.

அவர்கள், குடியிருப்புப் பகுதியில் நுழைந்த பாம்பைப் பிடித்தனர். பிடிப்பட்ட பின்னரே அந்த பாம்பு, மலைப் பாம்பு என்பது தெரியவந்தது.

ஊர்வனம் அமைப்பினர் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

வனச்சரக அதிகாரி உஸ்மான் அவர்களின் தலைமையில் வனவர் கலையரசன், வனப்பாதுகாவளர் பால்ராஜ் மற்றும் ஊழியர் அருண் ஆகியோர் இந்த மலைப்பாம்பு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x