Published : 30 Nov 2019 11:33 AM
Last Updated : 30 Nov 2019 11:33 AM
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.30) வெளியிட்ட அறிக்கையில், "ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
கடந்த 2013-ல் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழகத்தில் காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக 3 கட்டங்களாக 3 கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.
ஆனால் தமிழக விவசாயிகள், பொது மக்கள், சமூக நல ஆர்வலர்கள், தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் என எல்லோரும் இந்த ஆய்வினை எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு கட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் மேற்கொண்டனர். காரணம் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தால் விளைநிலங்கள், நீர்நிலைகள், சுற்றுப்புறச்சூழல் போன்றவை பாதிக்கப்படும். இருப்பினும் இந்த ஆய்வானது அவ்வப்போது நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கான காலம் முடிவதற்கு முன்பே ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு பணியை நிறுத்திக்கொண்டது. காரணம் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட பாறை எரிவாயு எடுப்பதற்கான தகுந்த இடமாக காவிரி படுகை இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான ஆதரவும், சூழலும் இல்லை என்பது தான்.
மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் கிருஷ்ணா, கோதாவரி, அஸ்ஸாம் மாநிலத்தில் காம்பே ஆகிய படுகைகளில் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ஆகியவற்றிற்காக மேற்கொண்ட ஆய்வும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி படுகையில் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு சாத்தியமில்லை என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.
எனவே மத்திய அரசு தமிழக உணவு பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் மக்கள் ஏற்க முன்வராத, விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT