Published : 30 Nov 2019 08:23 AM
Last Updated : 30 Nov 2019 08:23 AM
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2006 முதல் தற்போது வரை நடந்த 14 தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த லோக் தந்திரிக் யுவ ஜனதாதளம் கட்சியின் தேசியத் தலைவரான சலீம் மடவூர் என்ற முகம்மது சலீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐஐடி-யில் படித்த கேரள மாணவியான பாத்திமா லத்தீப், கடந்த நவம்பர் 9-ம் தேதி சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாத்திமாவின் தந்தை தனது மகளின் மரணம் தொடர்பாக நேர்மையான விசாரணை கோரி கேரள மற்றும் தமிழக முதல்வர்களிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த 2006 முதல் தற்போது வரை சென்னை ஐஐடி வளாகத்தில் 14 மாணவர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் தற்கொலை செய்துள்ளனர். இதுவரை ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம், உத்தர பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஐஐடி வளாகத்தில் நடந்த சாதிய, மதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாடுகளும், ஆசிரியர்களின் துன்புறுத்தல்களுமே இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பாத்திமாவின் மரணத்தின் பின்னணியிலும் மத ரீதியிலான பாகுபாடு நடந்துள்ளது. தன்னை துன்புறுத்திய சில பேராசிரியர்களின் பெயர்களை தனது மொபைல் போனில் பாத்திமா குறிப்பிட்டு இருந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகங்களில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியாத எஸ்சி, எஸ்டி மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் இரண்டாம் தர மாணவர்களாகவே பாவிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை களைந்து தற் கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும்.
எனவே சென்னை ஐஐடி-யில் கடந்த 2006 முதல் தற்கொலை செய்து கொண்ட அப்பாவி மாணவர் களின் மரணத்துக்கு காரணமான நபர்களைக் கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT