Last Updated : 29 Nov, 2019 08:05 PM

1  

Published : 29 Nov 2019 08:05 PM
Last Updated : 29 Nov 2019 08:05 PM

சிவகங்கையில் நாய்கள் சரணாலயம் அமையுமா?- 10 ஏக்கர் நிலத்தை தானமாகத் தர முன்வந்த விவசாயி

சிவகங்கை

சிவகங்கையில் நாய்கள் சரணாலயம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், சரணாலயத்திற்காக 10 ஏக்கர் நிலத்தைத் தர முன்னோடி விவசாயி ஆபிரகாம் முன்வந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. அவற்றிற்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவற்றின் மூலம் மக்களுக்கு ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதையடுத்து தெருநாய்களை பாதுகாக்கும் வகையில் சரணாலயம் அமைக்க சமூகஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 2017-ல் சரணாலயம் அமைக்க கால்நடை பராமரிப்புத் துறைக்கு அப்போதைய ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.

நாய்களுக்கு தமிழகத்தில் வேறு எங்கும் சரணாலயம் இல்லாதநிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அமைக்க கால்நடை பராமரிப்புத்துறை முயற்சி மேற்கொண்டது.

நாய்கள் தங்கும் அறைகள், மருத்துவமனை, டாக்டர், பராமரிப்பு ஊழியர், பால், பிரட் என, சரணாலயம் அமைக்க ரூ.4 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதற்காக சிவகங்கை அருகே நாலுகோட்டையில் கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

மேலும் இங்கு அதிகபட்சம் 400 நாய்கள் வளர்க்கவும், நோய்வாய்ப்பட்ட தெருநாய்களுக்கு உயர்தர சிகிச்சை, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிடப்பட்டது. ஆட்சியர் மலர்விழி மாறியதும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நாய்கள் சரணாலயம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சரணாலயத்திற்காக 10 ஏக்கர் நிலத்தை தர காளையார்கோவில் கல்வழியைச் சேர்ந்த விவசாயி ஆபிரகாம் தானமாகத் தர முன்வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x