Published : 27 Nov 2019 04:42 PM
Last Updated : 27 Nov 2019 04:42 PM

இந்தியாவில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை 3300 சதவீதம் அதிகரிப்பு: டிஜிபி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிர்ச்சித் தகவல்

சென்னை

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை 3300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி தலைமையில் நடந்த தென் பிராந்திய போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவிற்கான தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மாநகர காவல் அதிகாரிகள் அமைவிடத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா, கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த காவல் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி கலந்துகொண்டார். அதில், ''போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வழிகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினரை இச்சமுதாய சீர்கேட்டிலிருந்து காப்பாற்ற வேண்டியதன் பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற வேண்டும்'' என்று திரிபாதி கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் பொதுமக்களிடையே அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. கஞ்சா உபயோகிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டில் மற்ற போதைப்பொருளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து வருவதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்:

* கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை 3300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

* கடந்த 2014-ம் ஆண்டுக்கும் 2019-ம் ஆண்டுக்கும் இடையே 6.7 லட்சமாக இருந்த கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 3 கோடியாக அதிகரித்துள்ளது.

* போதைப்பொருள் வகைகளான ஹெராயின் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஹெராயின் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.90 லட்சத்திலிருந்து 19 லட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.

* கொகைன் என்கிற போதைப்பொருளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தில் இருந்து 2.3 கோடியாக கிட்டத்தட்ட 1000 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் கஞ்சாவுக்கு இணையாக கொகைன் பயன்பாடும் கிட்டத்தட்ட 1000 மடங்கு அதிகரித்துள்ளது.

கவலை தெரிவித்த டிஜிபி

தற்பொழுது போதைப் பொருள் பயன்படுத்தக்கூடிய ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அது தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என டிஜிபி கவலை தெரிவித்தார்.

''தென் பிராந்தியத்தில் தென்னிந்தியாவில் கூட்டு முயற்சியுடன் இவை தடுக்கப்பட வேண்டும். கஞ்சா பயன்படுத்தும் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தப் பழக்கம் அதிக அளவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பரவி வருகிறது. அவர்கள் அதிக அளவில் இதற்கு அடிமையாகி வருகின்றனர்'' என்று டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருளைப் பயன்படுத்துவது உலக அளவில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இத்தகைய போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவது குறித்து கவனத்துக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப் பொருள் கடத்தலை விதவிதமாக நவீன முறைகளில் செய்து வருகின்றனர். தற்போது அதில் அடுத்த கட்டமாக வெவ்வேறு தளங்களில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. ஆன்லைன் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்ய, கடத்துவதற்காக உருவாக்கப்பட்ட சட்ட விரோத இணையதளம் (dark web ) வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுத்த முடிவுகள்

இவற்றைத் தடுப்பதற்கு கூட்டு முயற்சியுடன் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பாக ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானம் மூலம் கொண்டு வரப்படும் அஞ்சல்கள், கூரியர் சேவைகள் போன்றவற்றின் மூலமும் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோன்று சந்தையில் செயற்கையாக உருவாக்கப்படும் போதை மருந்துகள் வரத்தும் அதிகரித்து நிரம்பி வழிகிறது. இவற்றை வியாபாரத்தில் நஷ்டமடைந்த மருந்து நிறுவனங்கள் தயாரிப்பது தெரியவந்துள்ளது.

கோப்புப் படம்

அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்களை விற்கும் ஒரு கூட்டம் அவர்களிடையே போதைப் பழக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் இளைய தலைமுறை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. போதைப்பொருளை விற்பனை செய்பவர்களைப் பிடித்துக் கைது செய்யும்போது அவர்கள் குறைந்த அளவு போதைப்பொருள் வைத்திருப்பதைக் காரணம் காட்டி தண்டனையிலிருந்து தப்புகின்றனர். அதேபோன்று இளம் சிறார்களும் இது போன்ற விற்பனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்று சிக்குபவர்கள், குறைந்த அளவு போதைப்பொருள் வைத்திருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர அனுமதி கேட்டுள்ளோம்.

மது போதை ஒரு தலைமுறையையே நாசம் செய்தது. தற்போது மது போதையை விடுத்து வேறு வகையான போதை வஸ்துக்களை மாணவர்கள், இளம் பருவத்தினர் நாடிச் செல்கின்றனர். அதில் முதலிடம் வகிப்பது கஞ்சா. அடுத்து போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், இருமல் மருந்துகள், கொகைன், ஹெராயின் என பல வகைகள் உள்ளன.

தற்போது வந்துள்ள இந்த ஆய்வு முடிவு பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x