Published : 27 Nov 2019 03:21 PM
Last Updated : 27 Nov 2019 03:21 PM

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (நவ.27) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதற்கான முன்மொழிவுகள் தமிழக அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனது கோரிக்கையினை ஏற்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, 23.10.2019 அன்று தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது.

தமிழக அரசின் பங்காக 1,170 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவிக்கிறேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x