Published : 27 Nov 2019 01:23 PM
Last Updated : 27 Nov 2019 01:23 PM
மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேரும் கிராமத்துக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 1996-ம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர, விடுதலை செய்யவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதனடிப்படையில், "13 பேர் விடுதலை செய்யப்பட்டது, அநீதியனாது. ஆதி திராவிட மக்களுக்கான நீதியையும், அவர்களுக்கு எதிரான குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் 13 பேரையும் அரசு விடுவித்துள்ளது. இதனால் மேலவளவில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள், அச்சத்துடனேயே உள்ளனர்.
அதோடு, அரசாணையில் பாரத ரத்னா என்பது போன்ற விருது, பட்டங்களின் தகவல்கள் இடம்பெறக்கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையில் பாரத ரத்னா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேலவளவு கொலை தொடர்பான வழக்கில், எனது மனுவைப் பரிசீலிக்குமாறு அறிவுறுத்திய நீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே, மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வழக்கறிஞர் ரத்தினம் கூறியிருந்தார்.
கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் 13 பேர் விடுதலையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது நீதிபதிகள் தரப்பில், "மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக் கூடாது என ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" எனக் கேட்கப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
பிற்பகல் விசாரணையின்போது 13 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT