Published : 27 Nov 2019 12:46 PM
Last Updated : 27 Nov 2019 12:46 PM
பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விநியோகத்தில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், தமிழக அரசு மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது எனவும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (நவ.27) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் பால் போன்று மற்ற உணவுப் பொருட்களும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகிப்படுவதாக மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நஞ்சு அதிகமிருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. நேரடியாக மக்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைவிட கொடுமையாக அந்தத் துறையின் அமைச்சர், கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் உணவுக் கலப்படத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. பாதுகாப்பற்ற, தர நிர்ணயம் பற்றிய தகவல்கள் முறையாக இல்லாத உணவுப் பொருட்கள் விநியோகிப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களை ஆய்வு செய்து மதிப்பிடும் பரிசோதனைக் கூடங்கள் முறையாக இயங்காததும், முழு நேரப் பணியாக இதனைக் கவனிக்கும் அதிகாரிகள் இல்லாததும் இதற்கு முக்கியக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்களின் உயிரோடு விளையாடும் இந்த அலட்சியமான செயல்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பால் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT