Published : 26 Nov 2019 05:33 PM
Last Updated : 26 Nov 2019 05:33 PM
தொழிலாளர் துறையினரால் வழங்கப்படும் உரிமங்களை இனி ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். அலுவலகத்துக்கு வந்து அலைய வேண்டியது இல்லை. அவரவர் இடத்திலிருந்தே உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“தொழிலாளர் துறையின் மூலம் வழங்கப்படும் உரிமங்கள் எளிமையாக்கப்பட்டு அவை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த ஜூலை மாதத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள், உணவு நிறுவனத்தினர், ஒப்பந்ததாரர்கள், பிற மாநிலப் பணியாளர்களை தொழிலில் பயன்படுத்தும் ஒப்பந்ததாரர்கள், மற்றும் எடையளவுகள் தயாரிப்பாளர்கள், பழுது பார்ப்பவர்கள், விற்பனையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டிய கடமையுள்ளது.
தொழிலாளர் துறையில் தற்போது ஆன்லைன் மூலம் எளிமையான முறையில் புதுப்பித்தலுக்கு மென்பொருள் உருவாக்கப்பட்டு தொழிலாளர் துறையின் வெப் போர்ட்டல் tn.labour.gov.in என்ற இணைய தளத்தில் உரிமங்கள் புதுப்பித்தல் என்ற பகுதியினை தேர்ந்தெடுத்துத் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக உரிய தொகையினைச் செலுத்தி உரிமங்களைப் புதுப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வணிகர்கள், உணவு நிறுவனம், மோட்டார் போக்குவரத்து நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் இவ்வசதியினை அவரவர் அலுவலகத்திலிருந்தே உரிமங்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்துள்ள இவ்வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT