Published : 26 Nov 2019 01:26 PM
Last Updated : 26 Nov 2019 01:26 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இன்று (அக்.26) முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய முதல்வர், பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, "தைப்பொங்கல் திருவிழா தமிழர்களின் தனிச்சிறப்புமிக்க திருவிழா. பொங்கல் விழா தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். தமிழ் மரபையும் பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா, தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுவது உண்டு. எனவேதான் கடந்த ஆண்டு, வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், ஏழை மக்களைப் பாதிக்காத வண்ணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ,1000-ம், பொங்கல் பரிசுத் தொகுப்பும் அரசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியது.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் பிற பணிகளுக்கு, செலவழித்துள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். சென்ற ஆண்டு பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல, இந்த ஆண்டும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT