Published : 26 Nov 2019 07:55 AM
Last Updated : 26 Nov 2019 07:55 AM

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மும்பை, டெல்லியில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ய அரசு ஆலோசனை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் 

சென்னை

வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய தொகுப்பு மற்றும் மும்பை, டெல்லியில் இருந்து வெங்காயத்தை கொள் முதல் செய்வது குறித்து ஆலோ சித்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையின் மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுட னான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் பேசும்போது, ‘‘இயற்கை சீற்றத் தால் ஏற்படும் புயல், வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரத்து 359 விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 305 கோடியே 34 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிர்க்கடன் இலக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப் பட்டு தற்போது வரை 6 லட்சத்து 95 ஆயிரத்து 681 விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 987 கோடியே 23 லட்சம் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.115-க்கு சென்றுவிட்டதே? விலையைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. டிசம்பரில் வெங்காய வரத்து அதிகரித்துவிடும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது.

கூட்டுறவுக் கடைகளில் விற்றால் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரலாமே?

ரூ.14 லட்சத்துக்கு 36 ஆயிரம் டன் வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவுக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிலோ ரூ.50-க்கு வாங்கி ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது. ரூ.10-ஐ அரசே ஏற்கிறது. மேலும், மத்திய தொகுப்பில் இருந்து வெங்காயத்தை வாங்கி விற்பது சாத்தியமா என்பது குறித்தும் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து கொள்முதல் செய்து விற்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதுக்கினால் நடவடிக்கை

வெங்காயம் பதுக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழகத்தில் உள்ள மொத்த விலைக்கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத் திருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெங்கா யத்தை பதுக்குபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x