Published : 25 Nov 2019 12:35 PM
Last Updated : 25 Nov 2019 12:35 PM

மத்திய அரசின் பரிந்துரையால் தமிழகத்தில் 3,400 அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது: வேல்முருகன்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 40 லட்சமாகக் குறைந்துவிட்டது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (நவ.25) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. தமிழர்களால் இதனை நன்கு உணர முடிகிறது.

ஆனால் பெரும்பாலான இந்தி மாநிலங்கள் மக்களுக்கு ஆதரவான, எதிரான நடவடிக்கைகளைப் பிரித்தறிவதில்லை. இத்தனைக்கும் பாஜகவை ஆட்சியில் உட்கார வைத்த மாநிலங்களே அவைதான். இம்மாநிலங்களுக்கு இரண்டகம் செய்கிறோமே என்ற உறுத்தல் கிஞ்சிற்றும் இல்லாத கட்சிதான் பாஜக.

இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டுவந்து மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியையும் மின்சாரத்தையும் பொதுப் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமராக மோடி வந்ததிலிருந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமல்ல; முற்றிலும் மக்கள் விரோத நடவடிக்கைகளே வரிசைகட்டுகின்றன.

தமிழ்நாட்டில் பாஜகவின் சித்தாந்தம் சீண்டப்படுவதில்லை என்பது தெரிந்தும், அதனை அடியொற்றிய வரைவுத் திட்டங்களைக் கூட செயல்படுத்த தமிழக அரசு கட்டாயப்படுத்தப்படுகிறது. அதுதான் கஸ்தூரி ரங்கன் குழுவின் தேசிய புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவு. மக்கள் கருத்துக்காக வைக்கப்பட்ட நிலையிலேயே அதனைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது தமிழக அரசு.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேசியப் பொதுத்தேர்வு இந்த ஆண்டிலேயே உண்டு என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு எதிர்ப்பு வலுக்கவே; இல்லை இல்லை, புதிய கல்வித் திட்டம் அமலாவதைப் பொறுத்து பரிசீலிப்போம் என்றுதான் சொன்னேன் என்றார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் 'அந்தப் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்றார். இப்போது மோடியின் கட்டாயத்தால் சுமார் 3,400 அரசுப் பள்ளிகளை மூடிவிடலாமா என்று பார்க்கிறது பள்ளிக் கல்வித்துறை.

சுதந்திர இந்தியாவை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கட்டமைத்தது மத்திய திட்டக் குழுதான். ஆனால் ஜனநாயகம் என்றால் பாஜகவுக்கு அறவே பிடிக்காது. அதனால் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியது. அது அரசுப் பள்ளிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கென இருந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு அமைப்புகளையும் இணைத்து 'ஒருங்கிணைந்த அனைவருக்கும் கல்வித்திட்டம்' என்ற ஒரே அமைப்பாக்கியது.

இது அறிமுகம் செய்த 'மூன்றாண்டு உடனடி செயல் திட்டம்', 'மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது அருகிலுள்ள அரசுப் பள்ளியோடு இணைக்க வேண்டும்' என்கிறது. அதன்படி, 15-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 3.7 லட்சம் உள்ளன; அவற்றை மூடிவிடலாம் என்று மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,400-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் செப்டம்பர் மாத இறுதி வரையிலான மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் எப்படியும் சுமார் 3,400 பள்ளிகளை மூட வேண்டியதிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விதான் நாட்டின் உயிர் என்று காமராஜர் உருவாக்கிய பள்ளிகளுக்குத்தான் எமனாக வருகிறது மோடியின் மக்கள் விரோத திட்டம். கடந்த 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பெருகின என்றாலும் மோடி வந்ததிலிருந்து புதிய வேகமே ஏற்பட்டது. அரசுப் பள்ளிகள் போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை; உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில்லை.

இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 40 லட்சமாகக் குறைந்துவிட்டது. மத்திய அரசின் இப்போதைய முடிவால், மாணவர் எண்ணிக்கை மட்டுமல்ல; அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மேலும் குறைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.

மத்திய அரசின் கட்டாயத்தால் 3,400 அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் தமிழக அரசு. அதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x