Published : 25 Nov 2019 11:09 AM
Last Updated : 25 Nov 2019 11:09 AM
ஓ.பன்னீர்செல்வம் குறித்து தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை எனவும், அவர் மீது தனக்கு மிகவும் மரியாதை இருப்பதாகவும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசும்போது, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட இக்கட்டான அந்த சமயத்தில் தமிழகத்துக்கு திசை காட்டியது துக்ளக். சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்தித்துப் புலம்பினார். அப்போது, அவரிடம் நான் பேசிய விதம் குறித்து இங்கு பகிர்ந்துகொள்ள முடியாது. அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தேன். அதற்கு பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. இரண்டாகப் பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்குண்டு" என்றார்.
இந்நிலையில், அந்நிகழ்ச்சியில், "ஓ.பன்னீர்செல்வத்திடம் நீங்களெல்லாம் ஏன் ஆணாக இருக்கிறீர்கள் எனக் கேட்டேன்" என குருமூர்த்தி பேசியதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அவ்வாறு அவர் பேசும் வீடியோவும் வைரலானது. இந்நிலையில், இந்தப் பேச்சு குறித்து குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, குருமூர்த்தி இன்று (நவ.25) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை.
இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூறக் காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ''ஜெயலலிதாவை ஆதரித்த துக்ளக், அவரை ஏற்ற சசிகலாவை எதிர்த்தது சரியல்ல'' என்று கூறினார். பதில் கூறும்போது ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதைத் திரித்துப் பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பன்னீர்செல்வம் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து" என்று குருமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT