Published : 25 Nov 2019 09:55 AM
Last Updated : 25 Nov 2019 09:55 AM

சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி? - விவசாயிகளுக்கு கால்நடை மருத்துவர் ஆலோசனை

மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில் வேளாண் துறை சார்பில் பால் பண்ணையில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த பண்ணைப் பள்ளி வகுப்பு நடைபெற்றது.

சேலம்

சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து மேச்சேரி முதன்மை கால்நடை மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேச்சேரி வட்டார வேளாண்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பால் பண்ணையில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பண்ணைப் பள்ளி வகுப்பு மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டியில் நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.

வேளாண் அலுவலர் பாலுமகேந்திரன் தலைமை வகித்து பேசும்போது, “உபரி வருமானம் பெற கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு , கோழி வளர்ப்பு , மீன் வளர்ப்பு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை தொழில் செய்ய வேண்டும்” என்றார்.

மேச்சேரி முதன்மை கால்நடை மருத்துவர் சின்ன மாரியப்பன் பேசும்போது, “சீரான பால் உற்பத்தி தரவல்ல கலப்பின பசுக்கள் வளர்க்க ஏற்றவை. பளபளப்பான கண்கள், மினுமினுப்பான தோல், ஈரமான நாசிப்பகுதி, சிறிய மார்பு, அகன்ற வயிற்றுப் பகுதி, கன்று ஈன்ற பசுக்களின் (முதல் அல்லது இரண்டாம் ஈற்று) மடி தொடுவதற்கு பஞ்சுபோன்று இருத்தல் வேண்டும். மடியின் ரத்த நாளங்கள் புடைத்து பெரிதாயிருத்தல் மற்றும் சுறுசுறுப்பாக அசை போடுதல் போன்ற குணாதிசயங்கள் உள்ள கறவை மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், லாபகரமான பால் உற்பத்திக்கு ஏற்ற பசு இனங்களை தேர்வு செய்தல், பசுந்தீவன மற்றும் கலப்பு தீவனங்களின் பயன்பாடு, மடிநோய் வராமலிருக்க கையாள வேண்டிய முறைகள், சுகாதாரமான பால் உற்பத்தி மற்றும் நோய் பராமரிப்பு ஆகியன குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இதில், முன்னோடி விவசாயிகள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x