Published : 25 Nov 2019 02:45 AM
Last Updated : 25 Nov 2019 02:45 AM
இரண்டு வயதில் டென்மார்க் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை, தன்னுடைய 41 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 68 வயது தாயார் தனலட்சுமியைக் கண்டுபிடித்து சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
இதற்காக டேவிட் நீல்சன் நடத்திய ஆறு ஆண்டு காலப் போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமானது. 1976-ம் ஆண்டு பல்லாவரத்தில் கலியமூர்த்தி-தனலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் டேவிட் நீல்சன் (டென்மார்க் தம்பதி வைத்த பெயர்). 1978-ம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது வயதில் டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட டேவிட் தனது பெற்றோரைத் தேடி கடந்த 2013-ம் ஆண்டு சென்னை வந்தார்.
அப்போது அவரிடம் இருந்தது இரண்டு வயதில் தனது தாயாருடன் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் மற்றும் தன்னை தத்து கொடுத்த ஆதரவற்றோர் இல்ல முகவரி. பல்லாவரத்தில் அமைந்திருந்த அந்த ஆதரவற்றோர் இல்லம் 1990-ஆம் ஆண்டே மூடப்பட்டுவிட்டதால் தேடும் முயற்சி அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் மனமுடைந்த டேவிட், வருத்தத்துடன் மீண்டும் டென்மார்க் திரும்பிச் சென்றார்.
ஆனாலும் அவர் தனது பெற்றோரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தீவிரமாக இருந்தார். தமிழகத்தில் எங்காவது ஒரு மூலையில் தனது பெற்றோர் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. நான்காண்டுகள் கழித்து மீண்டும் 2017-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார் டேவிட்.
இம்முறை சென்னை வந்த டேவிட், சில நல்ல உள்ளங்களைச் சந்தித்தார். சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பவார் மற்றும் அருண் தோலே உள்ளிட்டோரைச் சந்தித்து தனது நிலையைத் தெரிவித்தார். அவர்களிடம் தாயுடன் இருக்கும் தன்னுடைய இரண்டு வயது புகைப்படம் மற்றும் பல்லாவரம் ஆதரவற்றோர் இல்ல முகவரியை அளித்து விட்டுச் சென்றார்.
டேவிட் குறித்த தகவல்களைத் தேடிய அருண் தோலே, அஞ்சலி பவார் உள்ளிட்டோருக்கு சில தகவல்கள் கிடைத்தன. 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்லாவரத்தில் கலியமூர்த்தி -தனலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது மகனாக டேவிட் பிறந்தது சென்னை மாநகராட்சி ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடிய நிலையில் தனலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது தங்கள் இரண்டு குழந்தைகளையும் அங்கு உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு வைத்துள்ளார். அவ்வப்போது சென்று தனது குழந்தைகளை தனலட்சுமி பார்த்து வருவது வழக்கம்.
அப்படி ஒரு நாள் சென்றபோது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''உன்னுடைய குழந்தைகள் இருவரையும் டென்மார்க்கை சேர்ந்த இரண்டு தம்பதிகளுக்கு தத்துக் கொடுத்துவிட்டோம்'' என்று தெரிவித்துள்ளனர். தனலட்சுமியின் விருப்பத்தையும் அவருடைய அனுமதியையும் பெறாமலே இரண்டு குழந்தைகளும் டென்மார்க் தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தைகள் பற்றி அவர் கேட்டபோது, இங்கே வறுமையில் வாடி கஷ்டப்படுவதை விட டென்மார்க்கில் செல்வச் செழிப்புடன் குழந்தைகள் வளர்வார்கள் என்று ஆறுதல் கூறி ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் அவரை அனுப்பி வைத்துள்ளனர். மனதை கல்லாக்கிக் கொண்டு தனலட்சுமி வாழ்ந்து வருகிறார்.
மேற்கண்ட தகவல்களைச் சேகரித்த அஞ்சலி பவார், அருண் தோலே இருவரும் டேவிட் குறித்த ஒரு சிறிய குறும்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நண்பர்களுடன் அவருடைய பெற்றோரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் தனலட்சுமி தனது கடைசி மகன் சரவணனுடன் மணலியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.
உடனடியாக இந்தத் தகவல் டென்மார்க்கில் வசிக்கும் டேவிட் நீல்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தனது தாயார் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் பறந்தோடி வந்த டேவிட, தாயைக் காண கடந்த சனிக்கிழமை மணலியில் உள்ள வீட்டுக்குச் சென்றார். அந்தச் சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. அங்குள்ள அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இரண்டு வயதில் தான் இழந்த தன்னுடைய இரண்டாவது மகன் டேவிட், 43 வயதில் தன்னைத் தேடி வந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் தனலட்சுமி. படபடப்பை அவரால் அடக்க முடியவில்லை. மகனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, அழுத அவர் மகனிடம் தனது எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டினார்.
ஆனால் அது டேவிட்டுக்குப் புரியவில்லை. காரணம் டேவிட்டுக்குத் தமிழ் தெரியாது. தனலட்சுமிக்கு டேனிஸ் மொழி தெரியாது. ஆனால் இருவருக்கும் ஒன்று தெரியும். அது பாசமொழி. அந்த மொழியால் இருவரும் பேசிக் கொண்டனர். மகனைப் பிரிந்த துயரத்தை சைகை மூலம் தனலட்சுமி விளக்கிக் கூற முயன்றார்.
அதை ஆர்வத்தோடு டேவிட் கேட்க, ஆனால் தன்னால் விளக்கிச் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தனலட்சுமி மிகவும் வருத்தமடைந்து மகனின் தோளில் சாய்ந்து கதறினார். நெகிழ்ச்சியான அந்தச் சந்திப்பை அங்குள்ளவர்கள் பார்த்துக் கண் கலங்கினர்.
டேவிட்டின் அண்ணன், தனலட்சுமியின் மூத்த மகன் ராஜாவும் டென்மார்க் நாட்டில் வளர்ந்து வருகிறார். தற்போது அவர் மார்ட்டின் மேனுயேல் என்ற பெயரில் அங்கு வாழ்ந்து வருகிறார்.
தனது தாயை 41 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பதற்கு தனக்கு உதவிய சமூக ஆர்வலர் அஞ்சலி பவார் அருண் தோலே மற்றும் தனது நண்பர்கள், இணையதள நண்பர்கள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் டேவிட் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT