Published : 23 Nov 2019 10:32 AM
Last Updated : 23 Nov 2019 10:32 AM
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் வார்டுகள் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை, ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன. அதிமுக இரண்டு நாட்கள் மட்டும் விருப்ப மனுக்களை பெற்றது. திமுக சார்பில் விருப்பமனு பெறுவது நவம்பர் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் குறைந்தது ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளை கேட்டுப் பெற தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆர்வமாக உள்ளன.
இந்தக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் ஏற்கெனவே திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது, கவுன்சிலர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
இதனால் தங்களுக்கு மாநகராட்சி பகுதியில் செல்வாக்கு உள்ளதாகக் கூறி அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் ஆண்கள் வார்டுகளையே குறி வைத்துள்ளன. முதலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு, அதன்பிறகு தங்கள் கட்சிக்கு வார்டுகளை ஒதுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் அதிமுக உள்ளது.
இருந்தபோதும் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டால்தான் அதிக இடங்களில் வெற்றிபெற்று மேயர் பதவியைக் கைப்பற்ற முடியும் எனக் கருதுவதால் அதற்கேற்ப மாவட்ட அதிமுகவினர் காய்களை நகர்த்தி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT