Published : 23 Nov 2019 10:06 AM
Last Updated : 23 Nov 2019 10:06 AM
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வெட்டுவாக்கோட்டை சத்திரப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(48). இவர் களுக்கு லேகா(20) என்ற மகளும், தவசி(18), லெனின்(23), ராகவன்(16) என்ற மகன்களும் உள்ளனர்.
இவர்களில் லேகா, தவசி ஆகியோர் பிறவியிலேயே நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். லெனின் உடல்நலக் குறைவால் படிப்பை தொடராமல் வீட்டிலேயே உள்ளார். ராகவன் மட்டுமே அருகிலுள்ள அனந்தகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் நடராஜனின் குடிசை வீடு பெரிதும் சேதமடைந்தது. இதற்காக, தமிழக அரசின் நிவாரண உதவித் தொகை இதுவரை வழங்கப்படாத நிலையில், மிகவும் வறுமையான சூழலில் குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் நடராஜன் அவதிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து நடராஜன் கூறிய தாவது: கஜா புயலால் பாதிக்கப் பட்டபோது வழங்கப்பட்ட தார்ப்பாயை சேதமடைந்த வீட்டுக்கு கூரையாக அமைத்தேன். அதுவும் தற்போது சேதமடைந்துவிட்டதால், மழை பெய்தால் சிரமமாக உள்ளது. அரசு நிவாரண நிதி தருவதாகக் கூறியதால், வருவாய்த் துறையினரிடம் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு நகல்களைக் கொடுத்தேன். ஆனால், நிவாரண நிதி வரவில்லை. இதுதொடர் பாக, ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 முறை மனு அளித்தும், இதுவரை நிவாரண நிதி வழங்கப்படவில்லை என்றார்.
இதுகுறித்து ஊரணிபுரம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது, “கஜா புயலில் பாதிக்கப்பட்ட நடராஜனின் குடிசை வீட்டுக்கு நிவாரணம் வந்துள்ளது. அவர் வழங்கிய வங்கிக் கணக்கு எண் தவறுதலாக அச்சிடப்பட்டதால், அவருடைய வங்கிக் கணக்குக்கு பணம் போய் சேரவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது வாரத்துக்கு 2 பேர் என நிவாரண நிதி வழங்கப்படுவதால், விரைவில் அவருக்குரிய நிவாரண நிதி வங்கிக்கு நேரிடையாக சென்றுவிடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT