Published : 22 Nov 2019 09:45 AM
Last Updated : 22 Nov 2019 09:45 AM

புதிய வசதிகளுடன் ஐஆர்சிடிசி செல்போன் செயலி புதுப்பிப்பு: பயணிகள் எளிதாக கையாள முடியும்

செனனை

ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை பயணிகள் எளிமையாகப் பெறும் வகையில் ஐஆர்சிடிசி செல்போன் செயலி பல்வேறு புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதியோடு, ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் (irctc rail connect) என்ற செல்போன் செயலி கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில், மக்களின் சேவையை கருத்தில் கொண்டு புதிய வசதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மக்களின் இணையதள வசதி கொண்ட செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஐஆர்சிடிசி செயலியில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து, ஓய்வு அறைகள் முன்பதிவு, டிக்கெட் நிலவரங்களை பார்ப்பது,ரயில் சுற்றுலா திட்டங்கள் தகவல்கள், பேட்டரி வாகனங்கள், கால்டாக்ஸி முன்பதிவு, உணவுகள் ஆர்டர் செய்வது உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகிறோம்.

தற்போது, இந்த வசதிகளைப் பெறுவதிலும், கையாளுவதிலும் சிரமம் இருப்பதாகவும் அவற்றை சீர் செய்யும்படியும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு, தொழில்நுட்ப முறையில் தற்போது சில மாற்றங்கள் செய்து, இந்த செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எளிமையாக இந்த செயலியை தற்போது கையாள முடியும். முன்பெல்லாம் டிக்கெட் முன்பதிவு நிலவரங்களை காண பயணிகள் லாகின் ஐடி (பயனாளர் கணக்கு) வழியாக உள்ளே சென்ற பிறகே காண முடியும். தற்போது பயணிகள் லாகின் செய்யாமலே பார்த்துக் கொள்ளலாம். அதுபோல், டிக்கெட் முன்பதிவின்போது கேப்சா குறியீடு பதிவு செய்வதும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் கணக்கை பாதுகாக்கும் வகையில் வசதியாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x