Published : 22 Nov 2019 08:41 AM
Last Updated : 22 Nov 2019 08:41 AM
விலைமதிப்பில்லாத சிலைகளை மீட்க வேண்டியுள்ளதால், தனது பணிக்காலத்தை மேலும் நீட்டிக்க கோரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழமையான பஞ்சலோக சிலைகளை போலீஸ் அதிகாரிகளே சர்வதேச கடத்தல் கும்பலோடு கைகோர்த்து கடத்தி பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரனும், தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைகளை அறநிலையத் துறை அதிகாரிகளே திருட்டு கும்பலோடு சேர்ந்து திருடியுள்ளதாக ஆர்.வெங்கட்ராமன் என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் கடந்த 2018 நவம்பர் 30-ம் தேதியுடன் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது. ஆனால், சிலை கடத்தல்தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை ஓராண்டுக்கு நியமித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர். அவரது பதவிக் காலம்வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் பொன் மாணிக்கவேல் சார்பில் வழக்கறிஞர்கள் வி.செல்வராஜ், எஸ்.மணிமேகலை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மனுதாரர் பொன்மாணிக்கவேல் தவிர எஞ்சிய 70 அதிகாரிகள், 132 போலீஸார் என அனைவரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியவர்களை அவர்கள் சார்ந்த துறைகளுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முடங்கி உள்ளது. மனுதாரரின் விசாரணையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு பணி செய்யவிடாமல் தடுத்தனர். இந்தக் காரணங்களால் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை அவர் தொடங்க 6 மாதங்கள் ஆகிவிட்டன.
கடந்த 6 மாத காலத்துக்குள் சிலை கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகைளை மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்துவிலை மதிக்கமுடியாத பல சிலைகளை மீட்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அவரது பணிக்காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்துவரும் 25-ம் தேதி நீதிபதிகள்ஆர்.மகாதேவன், பி.டிஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT