Published : 22 Nov 2019 07:54 AM
Last Updated : 22 Nov 2019 07:54 AM
உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுகமாக தேர்வுசெய்யும் முறைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திருவனந்தபுரம் செல்வதற்காக நேற்று விமானநிலையம் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவசரச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:மக்கள் செல்வாக்கு இருந்தால் போட்டியிட வேண்டியதுதானே. கவுன்சிலரை மக்கள் தானே தீர்மானிக்கின்றனர்.
திமுக ஆட்சியில் 2006-ல் மறைமுகத் தேர்தல்தான் நடத்தப்பட்டது. தமிழகத்தைப்பொறுத்தவரை ஜனநாயக ரீதியான, நேர்மையான அமைதியான தேர்தல் நடக்க வேண்டும். திமுகஆட்சியில் 1996, 2006-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் வன்முறைகள் நடந்து உயர் நீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருந்தது. சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்து திரும்பவும் நடத்த உத்தரவிட்டது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அதிமுகவுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. மறைமுகத் தேர்தலை பொறுத்தவரை, கவுன்சிலரை மக்கள்தானே தேர்ந்தெடுக்கின்றனர். கவுன்சிலர்கள் மேயரைத் தேர்வு செய்யப் போகிறார்கள். முதல்வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், பிரதமரை மக்களவை உறுப்பினர்களும்தானே தேர்வு செய்கின்றனர்.
தற்போது மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க உள்ள நிலையில், எப்படியாவது தேர்தல் நடைபெறாமல் செய்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இருப்பினும் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என்பது எங்கள் நம்பிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT