Published : 21 Nov 2019 12:31 PM
Last Updated : 21 Nov 2019 12:31 PM
மதுரை மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ஆளும்கட்சியில் மேயர் பதவி கனவில் ‘சீட்’ கேட்டு விருப்பமனு கொடுத்த முக்கிய ஆண் நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர்.
உள்ளாட்சிப் பதவிகளில் மேயர் பதவி அதிகாரமும், செல்வாக்கும் மிக்கது. தமிழகம் முழுவதும் எந்ததெந்த மேயர் பதவிகள், ஆண்களுக்கு, மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. மதுரை மாநகராட்சி மேயர் பதவி முன்பு மறுசீரமைக்கப்பட்டபோது மகளிருக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது மீண்டும் மேயர் பதவிகள் ஒதுக்கீடு மறுசீரமைக்கப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தல் பற்றிய செய்திகள், தகவல்கள் ஆளும்கட்சியினருக்குக்கூட தெரிவிக்காமல் ஆட்சி மேலிடம் ரகசியம் காக்கிறது.
ஆனாலும், சில தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கேட்காமல் இருந்தால் மேயர் பதவிக்கு விருப்பமனு கொடுத்த முக்கிய நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், மறைமுகத் தேர்தல் நடப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுன்சிலர்கள் தேர்வாகி அவர்கள் மூலம் மேயர் தேர்வு செய்யப்படுவர். மேயர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கும் என நினைத்து அதில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்கள் கவுன்சிலர் ‘சீட்’டுக்கு விருப்பமனு கொடுக்கவில்லை.
மேயருக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் மேயர் பதவிக்கு வர நினைப்பவர்கள், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. தற்போது மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு வழங்க மீண்டும் கால அவகாசம் தேவை. அதற்கும் கட்சியில் ஆலோசனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT