Published : 21 Nov 2019 11:50 AM
Last Updated : 21 Nov 2019 11:50 AM

'உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்'-விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்: அதிமுக அறிவிப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என, அதிமுக அறிவித்துள்ளது.

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசரச் சட்டத்தை நேற்று தமிழக அரசு கொண்டு வந்தது. எனவே, இந்தப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் இல்லை. எனவே, இந்தப் பதவிகளில் போட்டியிட வேண்டி விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என, அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் இன்று (நவ.21) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசு, மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், கழகப் பொதுக்குழு முடிந்தவுடன், தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, அத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x