Published : 21 Nov 2019 09:17 AM
Last Updated : 21 Nov 2019 09:17 AM
தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 2018 முதல் 2019-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டு சீட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் வழங்குவதாகவும் மாதம் 600 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையறிந்து சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாதம் 600 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செலுத்தி சீட்டு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் சீட்டு போட்டவர்களுக்கு பட்டாசு பொருளும் சில்வர் பாத்திரங்கள் மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை ஏற்றத்தால் அவற்றை மட்டும் சில நாட்கள் கழித்து தருவதாக பணம் செலுத்தியவர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், உறுதி அளித்தபடி கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சீட்டு நடத்திய நிறுவன ஊழிர்கள் 2 பேரை நேற்று முன்தினம் சிறைபிடித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீஸார் ஊழியர்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சீட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT