Published : 21 Nov 2019 08:42 AM
Last Updated : 21 Nov 2019 08:42 AM
டி.செல்வகுமார்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம், சேவைகள் (ஊக்குவிப்பு, எளிதாக்குதல்) சட்டம் வரும் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும் என்று வேளாண் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்து, அதன்மூலம் உழவர்களின் வருவாயைப் பெருக்குவதற்கு வகை செய்யும் தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) 2019 சட்டத்துக்கு அண்மையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை வகுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சட்டத்தின்படி, நெல் உள்ளிட்ட தானிய வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், நார் வகைகள், காய்கனிகள், நறுமணப் பொருட்கள், கால்நடை உற்பத்திப் பொருட்கள், வனப் பொருட்கள், பட்டுக்கூடு, பட்டு இழை, கரும்புச் சர்க்கரை, பனைவெல்லம் என மொத்தம் 110 பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்து உரிய வருமானத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி தனிநபர் விவசாயி அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் கம்பெனி ஆகியவை மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரி அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
ஒரு பயிருக்கு ஒரு வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்யலாம். சாகுபடி காலத்துக்கு முன்பே விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதே விலைக்கு பொருட்களை விற்க முடியும். இதன்மூலம் விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பில் இருந்து தப்பிப்பதுடன், குறைந்தபட்ச விலை உத்தரவாமும் உறுதி செய்யப்படும். முன்னதாக கிராம அளவில் அமைக்கப்படும் உதவிக் குழுவானது இடுபொருட்களை தேர்வு செய்தல், விளைபொருட்களை தரம் வாரியாகப் பிரித்தல், விநியோகித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) ஒப்பந்த பண்ணைய பதிவு மற்றும் ஒப்பந்த பதிவு அலுவலராக செயல்படுவார். இவர் விவசாயி, ஒப்பந்த பண்ணைய வியாபாரி மற்றும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்வார். விளைபொருட்களின் தரம் மற்றும் விலையை நிர்ணயிக்கும்போது, மாநில அரசின் தர நிர்ணய முகமை அல்லது மத்திய அரசின் விளைபொருள் உற்பத்திச் செலவு மற்றும் விலை நிர்ணயத்துக்கான ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒப்பந்தம் செய்யப்படும்.
இதுகுறித்து வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒப்பந்த பண்ணையச் சட்டத்துக்கான விதிகள் வரையறுக்கப்படுகின்றன. இப்பணி முடிந்ததும் சட்டத் துறை, நிதித் துறை ஒப்புதலுடன் அரசு நிதி ஒதுக்கும். அதைத்தொடர்ந்து திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
விவசாயிகள் வசதிக்காக, இந்தச் சட்டம் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. இச்சட்டத்தின் அடிப்படையில், உருவாக்கப்படும் விதிகளும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT