Published : 19 Nov 2019 04:33 PM
Last Updated : 19 Nov 2019 04:33 PM

இனியாவது நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை மாறட்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை மாறட்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ.19) உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தமானவை. அவை அவர்களுக்கு மீட்டெடுத்து வழங்கப்பட வேண்டும்.

சென்னையில் நடைபாதைகள் வாகன நிறுத்தங்களாகவும், இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைகளாகவும் மாறிவிட்டன என கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி கவலை தெரிவித்திருந்தேன். அதற்கு உயர் நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்திருப்பதில் திருப்தி. இனியாவது சென்னை, நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாறட்டும்!

சென்னை சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் அல்ல. அதிவிரைவு பேருந்துத் தடங்கள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தி, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தான் என்பதை அரசும், மக்களும் உணர வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x