Published : 18 Nov 2019 02:56 PM
Last Updated : 18 Nov 2019 02:56 PM

உள்ளாட்சித் தேர்தல்: நவ. 21-23 தேதிகளில் விருப்ப மனுக்களைப் பெறலாம்; தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நவ. 21, 22, 23 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.18) வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் காந்தி கண்ட கனவின்படி பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா சட்டம் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு அடுத்த நிலையில் உள்ளாட்சி மன்றங்களும் சட்டவடிவம் பெற்றது. இதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், கடந்த அக்டோபர் 2016 இல் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மூன்றாண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்களின் பல்வேறு முறைகேடுகளின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தல்களை முறையாக, பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019 மே 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டுமென ஆணையிடப்பட்டது.

அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு தமிழக மாநில தேர்தல் ஆணையம் 2019 அக்டோபர் 31 ஆம் நாளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என உறுதி கூறியது. ஆனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறுகிற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவிகளை நேரடியாகத் தேர்ந்தெடுக்காமல் மறைமுக தேர்தல் கொண்டு வருவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளையும் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அதையும் மீறி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமேயானால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவோம் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் உறுதி கூறியதோ, அந்த அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஓரணியில் திரண்டு அதிமுகவை தோற்கடிக்கிற வகையில் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை ஜெயலலிதா தலைமையில் அதிமுக சந்தித்தபோது பெற்ற வெற்றி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது 1.1 சதவீத வேறுபாட்டில் தான் வெற்றி பெற முடிந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுபோல, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 39 இடங்களில், 38 இடங்கள் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற்றது. இடைத்தேர்தல்களின் வெற்றி என்பது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றியே தவிர, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

எனவே, உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வருகிற மக்கள் விரோதக் கொள்கை கொண்ட அதிமுகவை வீழ்த்த வேண்டியதை தலையாய பணியாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அதற்காக காங்கிரஸ் கட்சியினர் இன்றிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடிப்படை பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், கீழ்க்கண்ட பதவிகளுக்கு

1. மாநகராட்சி மேயர் 10,000 ரூ.

2. மாநகராட்சி வார்டு உறுப்பினர் 3,000 ரூ.

3. நகராட்சித் தலைவர் 5,000 ரூ.

4. நகராட்சி வார்டு உறுப்பினர் 2,000 ரூ.

5. பேரூராட்சித் தலைவர் 3,000 ரூ.

6. பேரூராட்சி வார்டு உறுப்பினர் 1,000 ரூ.

7. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3,000 ரூ.

8. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 2,000 ரூ.

என நன்கொடைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் 50 சதவீதக் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிற விருப்ப மனுக்களை வருகிற நவம்பர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நன்கொடைத் தொகையோடு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திரும்பப் பெற வேண்டும்.

திரும்பப் பெறப்பட்ட மனுக்களுடன் நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்போது பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் அனைத்தையும் உரிய தொகையுடன் மாவட்டத் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x