Published : 16 Nov 2019 08:06 AM
Last Updated : 16 Nov 2019 08:06 AM
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் உட்பட 4 முன்னாள் எம்பிக்கள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை தொடர்ந்து, அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக நிர்வாக ரீதியிலான 47 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மனுக்களை பெற்று பரிசீலிக்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
சென்னையில் வடசென்னை தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமையிலும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேஷ் தலைமையிலும், தென்சென்னை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையிலும், விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி தலைமையிலும் மனுக்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி மேயர் பதவி மிக முக்கிய பொறுப்பாக உள்ளது. இப்பதவிக்காக அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்பியுமான ஜெ.ஜெயவர்தன், முன்னாள் எம்பிக்கள், நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோரும், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்டவர்களும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
இதேபோல், இதர மாநகராட்சிகளிலும் அந்தந்த மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் அதிமுகவில் விருப்ப மனு வழங்குதல், பூர்த்தி செய்து திரும்ப பெறுதல் ஆகியவை நிறைவு பெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT