Published : 15 Nov 2019 02:09 PM
Last Updated : 15 Nov 2019 02:09 PM

சென்னை வந்த விமானத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது: பயணி சீட்டுக்கடியில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல் 

சென்னை

சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் இருக்கைக்குக் கீழே மூன்று பார்சல்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. இவற்றைக் கைப்பற்றி சோதித்தபோது ரூ.1.33 கோடி மதிப்புள்ள 3.365 கிராம் எடையுள்ள சுத்தத்தங்கம் சிக்கியது.

சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. கிலோ கணக்கில் வாரந்தோறும் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மஸ்கட்டிலிருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்து இறங்கிய ஓமன் ஏர்லைன்ஸ் போயிங் விமானத்திலிருந்து (WY 253) இறங்கிய பயணிகளிடம் சோதனையிட்டதில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் சிக்கவில்லை. தங்கமும் சிக்கவில்லை. பின்னர் விமானத்திற்குள் சென்று அதிகாரிகள் சோதனையிட்டபோது விமானத்தின் பயணிகள் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த 3 கருப்பு கலர் பாா்சல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதை அதிகாரிகள் அலுவலகம் கொண்டுவந்து சோதித்தபோது அதில் சுத்தமான 24 காரட் தங்கக்கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அவை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை 3 கிலோ 365 கிராம் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சம் ஆகும்.

தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதைக் கடத்தி வந்தது யார் என்பதை சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் மலேசியா செல்லவிருந்த திருவாரூரைச் சேர்ந்த இப்ராஹிம் (36), விருதுநகரைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது அவர்களது டிராவல் பேக்கில் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக ரூ.45.4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு யூரோ மற்றும் ஆஸ்திரேயலியா நாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.

இதேபோன்று துபாயிலிருந்து மும்பை வழியாக சென்னை உள்நாட்டு முனையத்திற்கு ஏா் இந்தியா விமானம் நேற்று முன் தினம் நள்ளிரவில் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் விமானப் பயணிகளைச் சோதனையிட்டபோது மும்பையைச் சோ்ந்த தீபன் அசோக் சுதாா் (33) என்பவா் சூட்கேஸுக்குள் மறைத்து வைத்திருந்த 6 தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.1.19 கிலோ எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.43.7 லட்சம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x