Published : 14 Nov 2019 06:59 PM
Last Updated : 14 Nov 2019 06:59 PM
ஐஐடி மாணவி தற்கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.14) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1959 ஆம் ஆண்டில் ஜெர்மனி அரசின் ஒத்துழைப்போடு சென்னை கிண்டியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் அமைக்கப்பட்டது. இத்தகைய கல்வி நிறுவனங்களின் மூலமாக மாணவர்களிடையே அறிவியல் ஈடுபாடு வளரவும், ஆராய்ச்சியில் தீவிரமாக பங்கு கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் படித்த பலர் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய பெருமைகளை பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகம் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.
கிண்டியில் அமைந்துள்ள ஐஐடியில் படித்துக் கொண்டிருந்த 19 வயது மாணவி ஃபாத்திமா கடந்த வாரம் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. வகுப்பிலேயே படிப்பில் முதன்மை நிலையில் இருந்த தம் மகளின் சாவில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தற்கொலை செய்யப்பட்ட மாணவி ஃபாத்திமாவின் உடல் அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை உறுதி செய்கிறது.
மாணவி ஃபாத்திமா எழுதியிருக்கிற குறிப்பு மற்றும் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கிற கருத்துகள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில் தமது சாவுக்கு ஒரு பேராசிரியை கொடுத்த மனஉளைச்சல்தான் காரணம் என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேராசிரியரை விசாரிக்காமல் இருந்தது ஏன்? இதுகுறித்து புலன் விசாரணை ஏன் செய்யப்படவில்லை?
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இத்தகைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமுதாய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மாணவர்கள் உண்ணும் உணவில் கூட சைவம், அசைவம் என்று வேறுபாடு காட்டப்படுகிறது. அசைவ உணவு உண்ணுவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்கெனவே பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவை பற்றியெல்லாம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கண்டு கொள்வதில்லை.
எனவே, தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமா சாவில் மர்மம் இருப்பதற்கான பலத்த ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை பெற்றோரும் உறுதி செய்துள்ளனர். இந்தத் தற்கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணையை, தமிழக காவல்துறை நடத்தி, உண்மையை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT