Published : 14 Nov 2019 09:14 AM
Last Updated : 14 Nov 2019 09:14 AM

கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்

மதுரை

கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது அசாமில் இருந்து கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழாய்வில் ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருந்த நிலையில், கீழடி அகழாய்வு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன், தன்னை மீண்டும் இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டாரத்தில் பணியாற்ற அனுமதிக்க கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தார். இம்முறையீட்டில், சென்னை, கேரள மாநிலம் திரிச்சூர், கோவா என்ற முன்னுரிமை வரிசையின்படி பணி நியமனம்கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், தனது பரிந்துரையை இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஆண்டே அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணனை கோவாவுக்கு பணியிட மாறுதல் செய்து இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமர்நாத் ராமகிருஷ்ணன், தன்னை கீழடியில் மீண்டும் பணி நியமனம் செய்யாவிட்டால் சென்னை அல்லது திரிச்சூர் செல்லவே விருப்பப்பட்டார். இந்நிலையில், அவர் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x