Published : 14 Nov 2019 08:52 AM
Last Updated : 14 Nov 2019 08:52 AM
முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள ராயபுரம் மண்டலத்தில் சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களை சமன் செய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதியாக ராயபுரம் மண்டலம் உள்ளது.
இம்மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாலைகள் போக்குவரத்து நிறைந்த சாலைகளாக உள்ளன.
இம்மண்டலத்தில் அரசு தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை, சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், குறளகம், சென்னை உயர் நீதிமன்றம், பிராட்வே பேருந்து நிலையம், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, சென்னை துறைமுகம், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், கால்நடை மருத்துவக் கல்லூரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், முக்கிய வர்த்தக மையங்களான சவுக்கார்பேட்டை, பாரி முனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவற்றுக்கு அரசியல் தலைவர்களும், அரசு உயர் அதிகாரிகளும், பொது மக்களுக்கும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
கடந்த இரு மாதங்களாக சென்னையில் பெய்த மழையால் பல சாலைகள் மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. மேலும்குடிநீர் வாரியம் சார்பில் சாலை நடுவில் தோண்டப்பட்ட பாதாளசாக்கடை மூடிகளைச் சுற்றியும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்தின் வேகம் குறைந்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராயபுரம் மண்டலத்தில் சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.10 லட்சம் செலவில் 28 டன் கோல்டு மிக்ஸ் எனப்படும், சூடுபடுத்தாமல் பயன்படுத்தக் கூடிய தார், ஜல்லி கற்கள் கலந்த கலவையை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதைக் கொண்டு அனைத்து சாலைகளிலும் உள்ள மேடு, பள்ளங்களை மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்து வருகிறது. வழக்கமாக மழைக்காலம் முடிந்த பிறகே பழுதடைந்த சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பது வழக்கம். ஆனால் மழை காலத்துக்கு நடுவே சீரமைக்கும் பணிகளை தொடங்கி இருப்பது, வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT