Published : 13 Nov 2019 05:56 PM
Last Updated : 13 Nov 2019 05:56 PM
பாபர் மசூதி தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடி இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.13) செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறினார். இந்தக் கூட்டதில் திமுகவிடம் எத்தனை இடங்கள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல தாமும் திமுக தலைவர் ஸ்டாலினும் பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம் என்றும் கே.எஸ். அழகிரி கூறினார்.
மக்களவை தேர்தல் வெற்றி மூலமாக தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டதாகவும் அழகிரி தெரிவித்தார். முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றதாகவும் கே.எஸ். அழகிரி கூறினார்.
இதுகுறித்து கே.எஸ். அழகிரி மேலும் கூறியதாவது :
"சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் தீர்ப்பை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அந்தத் தீர்ப்புக்கு எதிராக இருந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளையும். பல சிறுபான்மை அரசியல் கட்சிகளே அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், மேற்கொண்டு இந்தப் பிரச்சினை வேண்டாம் என்பதற்காகத்தான்.
எனவே பெரிய நோக்கத்தோடு, நல்ல நோக்கத்தோடு, திறந்த மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அது. இந்தியா மட்டுமல்ல, உலக சமூகமும் காங்கிரஸினுடைய நிலையை ஆதரிக்கிறது.
காங்கிரஸ் மாற்றுக் கருத்து சொன்னால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும். நாங்கள் அதை விரும்பவில்லை. எங்களுடைய நிலையை சிறுபான்மை அரசியல் கட்சிகளும் அந்த சமூகங்களும் ஏற்றுக் கொண்டன," என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT