Published : 13 Nov 2019 07:50 AM
Last Updated : 13 Nov 2019 07:50 AM

காற்று மாசிலிருந்து நோயாளிகளை பாதுகாப்பது எப்படி? - மதுரையை சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் யோசனை

மதுரை

மக்களின் அன்றாட வாழ்க்கையில் காற்று மாசு இரண்டறக் கலந்துவிட்டது. அதற்கு சமீபத்திய உதாரணம் தலைநகர் டெல்லியை உலுக்கிய காற்று மாசைக் குறிப்பிடலாம்.

டெல்லியைப் போன்று தற் போது தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் காற்று மாசு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கி யுள்ளது. குறிப்பாக நுரையீரல் பாதிப்பு நோயாளிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி யில் 407 என்ற அளவிலும், சென் னையில் 262 என்ற அளவிலும் காற்று மாசடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மதுரையில்கூட சில நேரங்களில் காற்றில் மாசு துகள்களின் அளவு 70 முதல் 120 வரை சென்று விடுகிறது.

ஆக்ஸிஜன் குறைந்தால் பிரச்சினை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்சினையிலிருந்து நோயாளிகளும், பொதுமக்களும் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நுரையீரல் மருத்துவத் துறை தலைவர் மற்றும் ஆலோசகர் ஜி. வேல்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றில் 21 சதவீதம் ஆக்ஸிஜன் இருக்கும்.

இதில், ஆக்ஸிஜன் அளவு குறைந்து மாசுள்ள காற்றின் அளவு அதிகரிக்கும்போதுதான் பிரச்சினை. தற்போது மருத்துவ மனைகளுக்கு வருவோரில் 50 சதவீதம் பேர் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த கோளாறு களுக்கு சிகிச்சை பெறவே வரு கின்றனர். ஏற்கெனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், அது காற்றுக்குழாயில் அடைத்து நோயின் தன்மையை தீவிரம் அடையச் செய்கிறது. இதனால் இளைப்பு தொந்தரவு, நுரையீரல் தேய்மானம் ஏற்படுகிறது.

பொதுவாக, இந்த காலங் களில் குழந்தைகள், நீரிழிவு நோயா ளிகள், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstruc tive pulmonary disease), காச நோயா ளிகள், ஆஸ்துமா பாதிப்புள்ளவர் கள் கவனமாக இருக்க வேண் டும். பெரும்பாலும் கூட்டம் அதிக மாக உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது அவசியம்.

சூடாக சாப்பிட வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரித்துக் கொள்ள சத்துள்ள ஆகா ரங்களை வீட்டிலேயே சமைத்து சூடாக சாப்பிட வேண்டும். குளிர்ந்த காற்று, மாசடைந்த காற்றை சுவா சிக்கும்போது நுரையீரல் பாதித்த நோயாளிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் தும்மல், கண்களில் எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு தொந்தரவு வரும் வாய்ப்புள்ளது. வறட்டு இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சில் பாரம் போன்ற தொந்தரவுகளும் ஏற்படும். இந்தப் பிரச்சினைகளை தள்ளிப் போடாமல், மருத்துவர்களை உடனே அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

காற்று மாசுபாடு ஏற்பட முக்கியக் காரணம், வாகனங்களில் நாம் பயன் படுத்தும் எரிபொருள். சில வளர்ந்த நாடுகளில் 4 சக்கர வாகனம் வாங்கு வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் என்ற அள வுக்கு வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம், உயர்தர எரி பொருள் கிடைப்பதில்லை.

தரத் தில் குறைந்த எரி பொருளை அதிகம் பயன்படுத்தும்போது, காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகக் கலக்கும். பனிக் காலத்தில், சரி யான காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், நச்சுக் காற்று பல மணி நேரம் மேலே எழ முடியாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். கோடைகாலத்தில், வாகனப் புகை யோடு சேர்ந்து, வறண்ட பகுதி களும் நச்சுக் காற்றை உமிழும். இவ்வாறு அவர் கூறினார்.

காற்று மாசு ஏற்படுவது எப்படி?

மதுரை காமராஜர் பல்கலைக்கழக எரிசக்தி சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை தலைவர் டாக்டர் எஸ்.கண்ணன் கூறியதாவது: காற்றில் படியும் துகள்களை 3 வகையாகப் பிரிக்கலாம். 10 மைக்ரான் அளவுக்கு அதிகமாக இருப்பது முதல் வகை (மிதக்கக் கூடிய துகள்கள்). 10 முதல் 2.5 மைக்ரான் வரையுள்ளது 2-வது வகை. 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ளது மூன்றாவது வகை. மூக்கு துவாரம் வழியாக துகள்கள் உள்ளே புகும்போது, மூக்கு, நாசி, மூச்சுக்குழாய், அதிலிருந்து பிரிந்து வரக்கூடிய உப குழாய்கள் வழியாக சுரப்பு நீர் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.

10 மைக்ரான் வரையுள்ள துகள்களை அவை கெட்டியாக பிடித்துக் கொள்ளும். 10 மைக்ரானுக்கு கீழ் உள்ளவை, அதை மீறி உள்ளே சென்றுவிடும். 10 முதல் 2.5 வரையுள்ள துகள்கள் நுரையீரல் கடைசிப் பகுதியான காற்றுப் பைகள் வரை சென்று விடும். அதில், 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் காற்றுப் பைக்குள் நுழைந்து, ரத்தக்குழாயில் சென்று ரத்தத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பொதுவாக கடல் மற்றும் மற்ற நீர்நிலைகளில்தான் காற்றில் இருக்கும் மாசு சேகரம் ஆகும். சில சமயம் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால், காற்றில் உள்ள மாசு ஓர் இடத்திலேயே மையம் கொண்டு இருக்கும். அப்படித்தான் டெல்லி, சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x