Published : 18 Aug 2015 10:11 PM
Last Updated : 18 Aug 2015 10:11 PM
முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 14-ம் தேதி நடந்த உண்ணா விரதப் போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் பேசும்போது, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை அவதூறாகப் பேசினார்.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து உள்நோக்கத்துடன் அவர் பேசியிருக்கிறார். அந்த அவதூறு பேச்சு முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தண்டிக்க வேண்டும் என்று மனு வில் கூறப்பட்டுள்ளது. இம்மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அலுவலகங்களுக்கு பாதுகாப்பு
முதல்வர் ஜெயலலிதா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதால் இளங்கோவனுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:
தமிழகத்தில் முக்கியமான சாலைகள், சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்முறை நடந்துள்ளது. இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு, அவரது வீட்டில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலு வலகம் எதிரே நடக்கும் சட்ட விரோத ஆர்ப்பாட்டத்தை உடனே தடுப்பதுடன், அதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டு மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர், டிஜிபி., மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.
அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT