Published : 31 Oct 2019 09:11 PM
Last Updated : 31 Oct 2019 09:11 PM
சென்னை
வங்கக்கடலில் நவம்பர் 4-ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா, ‘மஹா’ புயலால் இனிமேல் மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்
வடகிழக்குப்பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் அரபிக் கடற்பகுதியில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாலும் தென் மாவட்டங்களிலும், உள்வட்டங்களிலும் மழை பெய்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியபோதிலும் அது ஆந்திரா நோக்கிச் சென்றதால், சென்னை உள்ளிட்ட கடற்கரையோர நகரங்களுக்கு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
இந்த சூழலில் தற்போது வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே உருவான காற்றழுத்த பகுதி நகர்ந்து குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழையைக் கொடுத்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மஹா எனும் புயலாக மாறி அரபிக் கடல்பகுதிக்குள் சென்று தீவிரப்புயலாக மாறி லட்சத்தீவு, அமனி தீவை நோக்கி நகர்ந்து செல்கிறது
இந்த சூழலில் முகநூலில் தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான், இந்து தமிழ் திசைக்கு (ஆன்-லைன்) பேட்டி அளித்தார்.
தமிழகமெங்கும் பரவலாகப் பெய்துவரும் மழை அடுத்து எத்தனை நாட்களுக்குத் தொடரும்?
குமரிக்கடற்பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மஹா புயலாக மாறி அரபிக்கடலுக்குள் வெகுதொலைவு சென்றுவிட்டது. ஆதலால், நேற்றுடன் பரவலாக மழைபெய்தது முடிந்துவிட்டது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுேம மழை பெய்தது. நாளை இன்னும் மழை குறைந்துவிடும்.
இப்போது நமக்குக் கிடைத்ததெல்லாம் மஹா புயலால் கிடைத்த முழு வீச்சுடன் கூடிய மழை எனச் சொல்லப்படும் காற்றின் ஈர்ப்பால் கிடைக்கும் மழைதான். தமிழகத்தில் நாளைமுதல் மழை குறைந்துவிடும். நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் மழை இருக்கும். அதன்பின் அங்கும் குறைந்துவிடும்.இப்போது பெய்யும் அளவுக்குத் தீவிரம் இருக்காது.
சென்னையில் மழையின் தீவிரம் எவ்வாறு இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரைக்கும் காற்றின் ஈர்ப்பால் கிடைக்கும் மழைதான் பெய்துவருகிறது. இன்னும் 2 நாட்களுக்குக் காலையிலிருந்து ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 4-ம் அடுத்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளதே, உருவாகிறதா, வேறு எங்கிருந்ததாவது வருகிறதா?
வங்கக்கடலில் நவம்பர் 4-ம்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி எனப் புதிதாக உருவாகாது. உண்மையில், பிசிபிக் கடல்பகுதியில் மாட்மோ என்ற புயல் உருவானது. அங்குத் தீவிரத்தைக் காட்டிவிட்டு அந்த புயல் மெல்ல வலுவிழந்து தென் சீனக் கடல் வழியாக நகர்ந்து பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா வழியாக 4-ம் தேதி அந்தமான் தீவை வந்தடையும்.
ஆதலால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை தென்சீனக் கடலிலிருந்து வருகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா?
பொதுவாகப் மியான்மரில் வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை கிடைப்பது அரிது. வட அந்தமான் கடற்பகுதிக்குள்தான் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிறது, ஆனால், தென் அந்தமான் பகுதிக்குள் வந்தால் மட்டுமே நமக்கு மழை கொடுக்க வாய்ப்பு.
வட அந்தமான் பகுதிக்கு வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து, புயலாக மாறினால், மேற்கு, வடமேற்காக நகர்ந்து ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்துவிடும் தமிழகத்துக்கு மழை இருக்காது. குறைந்த காற்றழுத்த பகுதி தென் அந்தமானுக்கு வந்து, அது வலுவடையாமல், புயலாக மாறாமல் தமிழக கடற்பகுதியை நோக்கிக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவே நகர்ந்து தமிழகத்துக்கு அருகே வலுவடைந்தால் மட்டுமே மழை கிடைக்கும்.
அந்தமான் கடற்பகுதிக்கு வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அங்கிருந்து என்னவாக உருமாகிறது என்பதைக் கண்டறியவே நவம்பர் 4-ம் தேதிக்குப்பின் சில நாட்கள் ஆகும். அதை இப்போது கூறுவது கடினம்.
இந்த மாற்றம் நிகழ்வதற்கு எத்தனை நாட்களாகும், அதற்கிடையே மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா?
நவம்பர் 4-ம் தேதி வட அந்தமான்பகுதிக்கு வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருமாறி, என்னவாக மாறும் என கணிக்க அதற்கடுத்தார்போல் 3 முதல் 4 நாட்கள்வரைகூட ஆகலாம். ஆதலால், அடுத்த ஒருவாரத்துக்குத் தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்த 10 நாட்கள் வரை மழை இருக்க வாய்ப்பில்லை
இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT