Published : 28 Oct 2019 12:36 PM
Last Updated : 28 Oct 2019 12:36 PM
நடுக்காட்டுப்பட்டி
குழந்தை சுஜித்தை மீட்க மாற்றுவழியை ஆராய வேண்டும். மீட்புப் பணியில் முதல்வர் தலையிட்டு முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என கரூர் எம்.பி.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெறும் பகுதிக்கு வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி குழந்தையின் தாயை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரத்திலிருந்து அரசாங்கம் நல்ல நோக்கத்துடன் பணியை மேற்கொண்டுவருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கேயே காத்துக்கிடக்கின்றனர். மழையைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வருகின்ற ஒரு நெகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. மீட்புப் பணியில் யாருடைய நோக்கத்தையும் குறைகூற இயலாது. ஆனால் இங்கு ஆரம்பத்திலிருந்தே ஒருவித தாமதம் இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வந்ததில் தொடங்கி தாமதம் இருக்கிறது.
மீட்பு நடவடிக்கையைப் பொறுத்தவரையில் பெரிய முன்னேற்றம் இன்றி நடைபெற்று வருகிறது. பாறையானது கடினமாக இருப்பதால் துளையிட தாமதம் ஆகிறது. ரிக் இயந்திரம் பயன்படுத்த முடிவு செயத்போதே பாறையின் தன்மையைப் பற்றி கூறி வேண்டாம் என்றோம். ஆனால், யாரும் அதை பொருட்படுத்தவில்லை. இங்கே ப்ளான் பி என்பது இல்லாமலேயே இருக்கிறது. ஒரு முடிவை யார் எடுப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. போர்வெல் இயந்திரம் மூலமே குழி தோண்டுவோம் என்று ஒரு யோசனையை முன்வைத்தோம். ஆனால், அதில் இறுதி முடிவை எடுப்பது அதிகாரிகளா? அமைச்சர்களா? என்று தெரியாமல் திணறும் நிலையே இருக்கிறது.
இத்தருணத்தில் சிறு ரிஸ்க்காவது எடுக்க வேண்டும். மாற்று வழியை ஆராய வேண்டும். அதை செயல்படுத்த முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT