Published : 16 Oct 2019 12:14 PM
Last Updated : 16 Oct 2019 12:14 PM
சென்னை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று (அக்.16) காலை முதல் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் வானிலை துறை தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்தியப் பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்துள்ள நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக்.16) தொடங்கியது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீ., பாம்பனில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தளவில், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 17, 18 ஆகிய தேதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT