Published : 07 May 2014 08:05 PM
Last Updated : 07 May 2014 08:05 PM

கஸ்தூரி & சன்ஸ் நிர்வாக இயக்குநராக ராஜீவ் சி. லோசன் பதவியேற்கிறார்

கஸ்தூரி & சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சி. லோசன் (43) நியமிக்கப்பட்டுள்ளார். 'தி இந்து' குழுமப் பத்திரிகைகளின் பதிப்பாளர்களான கஸ்தூரி & சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ராஜீவ் சி. லோசன், இப்பதவியை ஜூன் 1-ல் ஏற்கிறார். இக்குழுமத்தின் எடிட்டோரியல் அல்லாத பணிகளுக்கு அவர் தலைமை வகிப்பார். கே.எஸ்.எல். நிறுவன இயக்குநர்கள் குழுவில் அவர் இடம்பெறுவார்.

மெக்கின்ஸி & கம்பெனி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த ராஜீவ், மெக்கின்ஸி நிறுவனத்தின் சென்னை நகர நிறுவன ஸ்தல நிர்வாகியாகப் பதவி வகித்தார். அந்நிறுவனத்தின் தலைவர்களுக்கும் தலைமைக் குழுக்களுக்கும் செயலாற்றல் ஊக்குவிப்பாளராகவும், கலாசார மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். சமூகத்துறை, கிராமப்புறப் பொருளாதாரம், அனைவருக்கும் நிதியாதாராம் ஆகியவற்றிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

ஐ.கே.பி. நிறுவனத்தின் அறங்காவலராக இருக்கும் ராஜீவ், இந்தியாவின் கிராமப்பகுதிகளில் பொது சுகாதாரப் பிரச்சினைகளில் தொடர்ந்து சேவை புரிய திட்டமிட்டிருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற அவர், மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திலும் கொலம்பியா வர்த்தகப் பள்ளியிலும் பட்டங்கள் பெற்றுள்ளார்.

"டிஜிட்டல் யுகமான இந்தக் காலத்தில் இந்தியப் பத்திரிகைத்துறையும் குறிப்பாக 'தி இந்து' செய்திப்பத்திரிகைக் குழுமமும் புதுவிதமான சவால்களையும் வாய்ப்புகளையும் ஒருங்கே எதிர்கொண்டுள்ளன. பல்வேறுபட்ட வாசகர்களின் வாசிப்புத் தேவைக்கேற்ற பொருத்தமான, வளமான செய்தித் திரட்டுகளோடும், சிறந்த ஆசிரியக்குழும நெறிகளோடும், சிறந்த வர்த்தக உத்திகளோடும், அறநெறியில் ஆழ்ந்த பற்றுகொண்ட முற்போக்கான தொலைநோக்குப் பார்வையோடும் குழுமம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

குழுமத்தின் பங்குதாரர்களுக்கு நல்மதிப்பும், ஊழியர்களுக்கு நியாயமான - பொருத்தமான சலுகைகளும் பயன்களும், வாசகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இத்தொழிலில் தொடர்புள்ள இதர கூட்டாளிகளுக்குத் தொடர் பயன்களும் வழங்க, சரியான நிர்வாகியைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று கே.எஸ்.எல். நிறுவனத்தின் தலைவர் என்.ராம், இணைத் தலைவர் என்.முரளி ஆகியோர் பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

"செயல்துடிப்பு, சமூகக் கண்ணோட்டம், தொழில்முறை நிர்வாகி என்ற முறையில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றோடு கஸ்தூரி & சன்ஸ் லிட். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய சவால்மிக்க பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் ராஜீவ். மாறிவரும் காலங்களில், தான் பணியாற்றிய நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தியதோடு கலாசாரப் பரிமாற்றத்தையும் எளிதாகக் கொண்டுவந்திருக்கிறார். நம்முடைய தொழில் நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கப் போகிறார் என்பதில் பெரிதும் உற்சாகம் அடைந்திருக்கிறோம்" என்றும் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x