Published : 05 Oct 2019 04:39 PM
Last Updated : 05 Oct 2019 04:39 PM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணிக்காக ஃப்ரீ கோ வாகனம் அறிமுகம்

சென்னை

சென்னை எம்ஜிஆர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணிக்காக ஃப்ரீ கோ (FREEGO Vehicle) என்னும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம். இங்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல மொழி பேசுபவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலம் செல்கின்றனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ரயில் நிலையத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு வசதி தேவைப்படுகிறது. இதனால் பாதுகாப்புப் பணிக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரோந்து போலீஸாருக்காக கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக ஃப்ரீ கோ (FREEGO Vehicle) என்னும் ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே காவல் துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இந்த வாகனத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடியும்.

ஃப்ரீ கோ வாகனத்தில் ஏறி, நடைமேடையில் வலம் வரும் ரயில்வே பாதுகாப்புப் படையால், அவசர உதவி தேவைப்படும் பயணிகளுக்கு விரைந்து உதவ முடியும். ஒருவர் மட்டுமே ஏறி, பயணம் செய்யும் வகையில் ரோந்து வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம் என்பதால் இதை எளிதில் பயன்படுத்த முடியும்.

மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் இந்த ரோந்து வாகனங்கள் பயணிக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளில், காவல்துறையினர் இந்த வகை ரோந்து வாகனங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

சுமார் ரூ.5 லட்சம் மதிப்புகொண்ட இவ்வகை வாகனங்கள், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 6 ரோந்து வாகனங்கள் இதுவரை வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x