Published : 26 Sep 2019 12:20 PM
Last Updated : 26 Sep 2019 12:20 PM

மகனுக்குத் திருமணம்: 30 நாட்கள் பரோல் கோரி ராபர்ட் பயஸ் மனு; சிறைத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராபர்ட் பயஸ்: கோப்புப்படம்

சென்னை

மகனுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் கோரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மனுத்தாக்கல் செய்தார். இதற்குப் பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அகதியான தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்குப் பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்றுவிட்டதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டிவிட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்குத் திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் முன்கூட்டி விடுதலை செய்ய மாநில அமைச்சரவை, ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், தனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று (செப்.26) நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து விளக்கம் அளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x