Published : 25 Sep 2019 12:45 PM
Last Updated : 25 Sep 2019 12:45 PM
சென்னை
ரயில்வேயை தனியார்மயமாக்குவது ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரயில் சேவைகளை வழங்கும் தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட மொத்தம் 6 ரயில்வே மண்டலங்களின் தலைமை இயக்க மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள 23.09.2019 தேதியிட்ட சுற்றறிக்கையில், ரயில்களை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்கும்படி மண்டல ரயில்வே துறை நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது. இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (செப்.27) காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில்வேயின் இந்த முடிவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப்.25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்தப் போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாகச் செயல்படுத்துவதில் தவறில்லை. அதேநேரத்தில், ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT