Published : 19 Sep 2019 09:55 AM
Last Updated : 19 Sep 2019 09:55 AM
சென்னை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை எத்தனை நாட்களுக்குத் தொடரும், பகலில் பெய்துவரும் ம்ழை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
வெப்பச்சலனம் காரணமாகவும், வளமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த 17-ம் தேதி முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. ஆனால் கேடிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் எதிர்பார்த்த மழையில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதே தவிர ஆங்காங்கே மட்டுமே மழை பெய்தது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்தது. இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது. சென்னை நகரம் முழுவதும் காலை முதல் மழைச்சாரல் பெய்து வருகிறது.
இரவு முழுவதும் சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால், காலை நேரத்தில் அலுவலகத்துக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். ஒருநாள் இரவில் திருவள்ளூரில் 216 மி.மீ, பூண்டி ஏரியில் 206 மி.மீ, திருத்தணியில் 150 மி.மீ, சோழவரம் ஏரியில் 135 மி.மீ, எண்ணூரில் 107 மி.மீ, சென்னை நகரில் 104 மி.மீ, அயனாவரத்தில் 96 மி.மீ, பிராட்வே பகுதியில் 79 மி.மீ, அம்பத்தூரில் 85 மி.மீ, கே.கே.நகரில் 77 மி.மீ கனமழை பெய்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான்: படம் உதவி ஃபேஸ்புக்
சென்னையில் பெய்த மழை குறித்தும், எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் பிரதீப் ஜானிடம் 'இந்து தமிழ்திசை' இணையதளம் சார்பில் கேட்டோம்.
அதற்கு அவர் பதில் அளித்துப் பேசியதாவது:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கேடிசி எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழையை கடந்த 17-ம் தேதியே எதிர்பார்த்தேன். ஆனால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை பெய்த நிலையில் சற்று தாமதமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
சென்னையில் எத்தனை மி.மீ. மழை பெய்தது?
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் சென்னை நகரில் கனமழை பெய்து இருக்கிறது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் சென்னைக்கு 147 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 147 மி.மீ. மழையில் 100 மி.மீ. அதிகமான மழை நேற்று ஒரே நாளில் பெய்துவிட்டது. ஏறக்குறைய பாதிக்கும் மேலான மழை ஒருநாள் இரவில் பெய்திருக்கிறது. இந்த ஆண்டில் சென்னையில் அதிக மழை பெய்த நாளாக நேற்றைய இரவு இருக்கும்.
இந்த மழை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?
இந்த மழை 21-ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதுபோன்று இரவில் தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும். இரவில் இடியுடன் கூடியமழையாக இருக்கும்.
இன்று இரவு மழை இருக்குமா?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவும் இதேபோன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலும் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில்தான் மழை பெய்யும். பகல் நேரத்தில் மழை பெய்யாது. இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உண்டு, 21-ம் தேதி வரை இந்த மழை இருப்பதால், அடுத்துவரும் நாட்களிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கிறேன்.
சென்னையில் காலை முதல் பெய்துவரும் மழை இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்?
சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்து முடித்திவிட்டு காலை முதல் சாரலாக மழை பெய்து வருகிறது. வானத்தில் அடர்த்தியான மேகக்கூட்டங்கள் இருப்பதால், இன்னும் 2 முதல் 3 மணிநேரத்துக்கு சென்னை நகரில் இதுபோல் சாரல் விட்டு விட்டு பெய்யக்கூடும். நண்பகலுக்குப் பின் மழை நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
21-ம் தேதிக்குப் பின் மீண்டும் மழை இருக்கிறதா?
நிச்சயமாக 21-ம் தேதிக்குப் பின் மீண்டும் அடுத்த வாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இதுபோன்ற மழை இருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய அதிக வாய்ப்பு உண்டு. அதை அடுத்துவரும் நாட்களில் பார்க்கலாம்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்
பேட்டி: போத்திராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT