Published : 10 Sep 2019 09:17 AM
Last Updated : 10 Sep 2019 09:17 AM
க.சக்திவேல்
கோவை
ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை, உறவினர் பெயருக்கு எப்படி மாற்றுவது, அதற்கான வழிமுறை குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், பலர் டிக்கெட்டை ரத்து செய்துவிடுகின்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் பெயருக்கு மாற்றித்தரும் வசதி ரயில்வேயில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2018 செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் வரையிலான ஓராண்டில் கோவையில் 99 பேர், சேலத்தில் 67 பேர், ஈரோட்டில் 49 பேர், திருப்பூரில் 28 பேர் என மொத்தம் 253 பேர் பயனடைந்துள் ளனர்.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:
தனிப்பட்ட நபர் ஒருவர் பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்தால் 24 மணி நேரத் துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப் பாளரிடம் கடிதம் அளித்து, தங்கள் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு பயண முன்பதிவை மாற்றித்தரலாம்.
இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குமுன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமைஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வு களுக்கு குழுவாகச் செல்ல நினைத் தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழு வின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். தேசிய மாணவர் படையில் (என்சிசி) உள்ள மாணவர்கள் குழுவாக பயணிக்க முன்பதிவு செய்து, யாரேனும் வர இயலாவிட்டால, சக மாணவருக்கு பயண டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT