Published : 02 Sep 2019 06:14 PM
Last Updated : 02 Sep 2019 06:14 PM

சென்னையில் பேருந்து நடத்துனர்-தெலுங்கானா விளையாட்டு வீரர்களிடையே மோதலால் பரபரப்பு 

சென்னை எழும்பூரில் மாநகரப் போக்குவரத்துப் பேருந்து நடத்துனரை தெலங்கானா மாநில விளையாட்டு வீரர்கள் சிலர் தாக்கியதும், பிறகு இருதரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் பகுதியாகும். இந்த தகராறை அடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

29ஏ பேருந்து நடத்துனருக்கும் பேருந்தில் ஏறிய தெலுங்கானா மாவட்ட விளையாட்டு வீரர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, எழும்பூரில் பேருந்து வந்த போது அவர்கள் இறங்கும் சமயத்தில் ஓட்டுநருக்கும் இவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாய்த்தகராறு பிறகு கடும் கைகலப்பாக மாறியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சண்டையில் ஈடுபட்டவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

போலீஸாரின் விசாரணையில் இந்த விளையாட்டு வீரர்கள் சென்னை நேரு விளையாட்டரங்கில் கபடி விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என்றும் போட்டிகள் முடிந்து ஊர் திரும்பும் போதுதான் இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. லஷ்மணன் என்ற விளையாட்டு வீரர்தான் முதலில் தாக்கினார் என்றும் இதனால்தான் மோதல் வெடித்தது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகராறு முற்றும்போது மற்ற பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களும் ஒன்று சேர்ந்து தாக்கப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி இவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

போலீசார் விசாரணை முடிவில்தான் எதனால் இந்தத் தகராறு ஏற்பட்டது என்ற முழு விவரம் தெரியவரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x