Published : 10 Aug 2019 05:43 PM
Last Updated : 10 Aug 2019 05:43 PM

சென்னையில் 45,000 தெருக்களில் மழைநீர் சேகரிப்பு: சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45,000 தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறின்றி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க அலுவலர்களுக்கு ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று (10.08.2019) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பருவமழை காலத்திற்கு முன்னதாக ஒரு வார்டுக்கு 1,000 கட்டிடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இக்குழுக்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை இக்குழுக்களால் 2,12,468 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 1,15,779 கட்டிடங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 34,538 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட வேண்டும். மேலும் 62,151 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்றுள்ள 188 சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இக்கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பருவமழைக்கு முன்னதாக அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க இக்குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 45,000 தெருக்களிலும் பருவமழைக் காலங்களில் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையில்லாத வகையில் இடங்களைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்க ஆணையர்கள் அலுவலர்களுக்கு அறுவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர், துணை ஆணையர்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர், தலைமைப் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x